நண்பன், எதிரி என பார்க்காமல் மருத்துவம் செய்ய வேண்டும் என்று அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மதுரை மருத்துவ கல்லூரி முன்னாள் பேராசிரியர் வெங்கடகிருஷ்ணன் பேசினார்.
பட்டமளிப்பு விழா
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியின் 4–ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் துளசிராம் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் சிவக்குமார், துணை முதல்வர் முத்துலட்சுமி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் அருணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் பிரவீன்தங்கரூபன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மதுரை மருத்துவ கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் வெங்கடகிருஷ்ணன் கலந்து கொண்டு, 99 மாணவ –மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
சேவை
இங்கு பட்டம் பெற்றவர்கள் தகுதியின் அடிப்படையில் இந்த கல்லூரியில் சேர்ந்து, தகுதியின் அடிப்படையில் தேர்வு பெற்று உள்ளீர்கள். இது எங்களுக்கும், உங்களின் பெற்றோருக்கும் பெருமை அளிப்பதாகும்.
கடின உழைப்பு, விடா முயற்சியும் வெற்றி பெற மிகவும் முக்கியமாகும். மருத்துவம் தொழில் அல்ல. இது ஒரு சேவை ஆகும். சேவை செய்யும்போது பணம் வந்தால் தவறில்லை. ஆனால் பணத்துக்காக மருத்துவம் செய்யக்கூடாது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதனை ஒரு சேவையாக கருத வேண்டும்.
1962–ம் ஆண்டு நான் இந்திய எல்லையில் இருந்தபோது சீன போர் நடந்தது. அப்போது சீன வீரர் ஒருவரும், இந்திய வீரர் ஒருவரும் அடிபட்டு வந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது சீன வீரருக்கு உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும். இந்திய வீரருக்கு 2 மணி நேரம் கழித்து அறுவை சிகிச்சை செய்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது எதிரியான சீன வீரருக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவம் அளிக்கப்பட்டது.
நண்பன், எதிரி பார்க்காமல்..
எனவே, மருத்துவம் செய்வதில் எதிரி, நண்பன் என யாரையும் பார்க்காமல் மருத்துவம் செய்ய வேண்டும். வாழ்க்கையின் முக்கிய பருவம் மாணவ பருவம்தான். மாணவர்கள் தற்போது படிப்பதுடன் விட்டு விடக் கூடாது. தொடர்ந்து மருத்துவத்துறை பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் முதுகலை பட்டம் படிக்கவேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ள கூடாது. முதுகலை பட்டம் முடித்து திருமணம் செய்து கொள்ளலாம்.
நீங்கள் 5 விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். எளிதில் அணுக கூடியவராக இருக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் சிகிச்சைக்கு தகுதியுடையவராக இருக்க வேண்டும். நோயாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அனைத்துவித நோயாளிகளிடம் நடந்து கொள்வது, அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். உங்களின் சிகிச்சை பலனளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
நோயாளிகளிடம் கனிவாக பேசி அவர்களை தொட்டு பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் நோயாளிகளுக்கு ஆறுதலும், மனநிம்மதியும் கிடைக்கும். நோயாளிகளாக வருபவர்கள் உங்களின் உறவினர்களாக செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவ–மாணவிகள், பெற்றோர்கள், உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
388 total views, 1 views today