கடந்த மாதம் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து ஒரு வாரத்தில் தகவல் கிடைக்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி எம்.எச். 370 மலேசிய விமானம் காணாமல் போனது. இது மேற்கு ஆஸ்திரேலியா கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டன. ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்க கடற்படையிடமிருந்து பெறப்பட்ட ரோபோ நீர்மூழ்கியைக் கொண்டு கடலுக்கடியில் தேடும் முயற்சியில் ஈடுபட ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ‘இந்த நீர்மூழ்கி மூலம் இன்னும் ஒரு வாரத்தில் விமானம் குறித்து தகவல் கிடைக்கும்’ என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கடியில் செலுத்தப்பட்ட நீர்மூழ்கி இதுவரை ஆறு முறை கடல் ஆழத்தினை ஸ்கேன் செய்துள்ளது. எனினும், எதுவும் கிடைக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக, சனிக்கிழமை செய்தியாளர் களிடம் பேசிய மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஹிசாமுதீன் ஹுசைன், “இன்றும் நாளையும் நடைபெற உள்ள தேடுதல் பணி, மிகவும் இக்கட்டான சூழ்நிலையை அடைந்துள்ளது.
எனவே, விமானத்தைத் தேடும் முயற்சிக்கு பலன் கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறு உலகில் உள்ள மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் தேடுதல் பணி கடினமாகி வருகிறது. எனினும், இந்த முயற்சி எந்த நிலையிலும் கைவிடப்பட மாட்டாது” என்றார்.
231 total views, 1 views today