‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் சொதப்பிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, ஏமாற்றியது. இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது.
வங்கதேசத்தின் மிர்புரில், நேற்று நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. மழை குறுக்கீடு:
இப்போட்டி துவங்கும் முன் பலத்த மழை பெய்ய, 40 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. பின் ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் மலிங்கா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
ரகானே ஏமாற்றம்:
இந்திய அணியின் ‘பேட்டிங்’ துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. மாத்யூஸ் பந்தில் ரகானே(3) பரிதாபமாக போல்டானார்.பின் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் மாதிரி பேட்டை சுழற்றியபடி களமிறங்கிய விராத் கோஹ்லி, ரோகித் சர்மாவுடன் சேர்ந்து விவேகமாக விளையாடினர்.
கோஹ்லி 11 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தை துாக்கி அடிக்க, அதனை கோட்டைவிட்டார் மலிங்கா. இதனை பயன்படுத்திய இவர், இதே ஓவரில் ஒரு இமாலய சிக்சர் அடித்து அசத்தினார். முதல் 10 ஓவரில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்தது.
மீண்டும் அரைசதம்:
ஹெராத் ‘சுழலில்’ ரோகித் சர்மா(29) சிக்கினார். ‘ரன் ரேட்’ குறைவதை உணர்ந்த விராத், அதிரடிக்கு மாறினார். ஹெராத் பந்தை சிக்சருக்கு அனுப்பி, இத்தொடரில் நான்காவது அரைசதம் கடந்தார். பின் மலிங்கா பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். உச்சக்கட்டமாக குலசேகரா வீசிய போட்டியின் 16வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அட்டகாசப்படுத்தினார்.
‘வில்லன்’ யுவராஜ்:
மறுமுனையில் யுவராஜ் ஆமை வேகத்தில் ஆட, விராத் கோஹ்லியே விரக்தி அடைந்தார். அணியின் ஸ்கோரும் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. இவர் 11 ரன்களுக்கு(21 பந்து, ஸ்டிரைக் ரேட் 52.38) வெளியேற, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். கடைசி கட்டத்தில் ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா கலக்க, தோனி தடுமாற, ரன் வறட்சி ஏற்பட்டது. கடைசி 4 ஓவரில் 19 ரன்கள் தான் எடுக்கப்பட்டன. கோஹ்லி( 58 பந்தில் 77 ரன், 5 பவுண்டரி, 4 சிக்சர்) ரன் அவுட்டானார். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் மட்டும் எடுத்தது. தோனி( 7 பந்தில் 4 ரன்) அவுட்டாகாமல் இருந்தார்.
பவுலிங் மோசம்:
போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு குசல் பெரேரா(5) ஏமாற்றினார். பின் இந்திய பவுலர்கள் சொதப்ப, எளிதாக ரன்கள் எடுக்கப்பட்டன. மோகித் சர்மா வீசிய போட்டியின் 4வது ஓவரில் தில்ஷன் 2 பவுண்டரி, ஜெயவர்தனா ஒரு பவுண்டரி அடிக்க, 15 ரன்கள் வாரி வழங்கப்பட்டன. அஷ்வின் ‘சுழலில்’ தில்ஷன்(18) வெளியேறினார். அடுத்து வந்த சங்ககரா தன் பங்கிற்கு ரவிந்திர ஜடேஜா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார்.
கடைசி சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் பங்கேற்ற ஜெயவர்தனா 24 ரன்களுக்கு வெளியேறினார். திரிமான்னே(7) விரைவில் அவுட்டாக, 12.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்து தவித்தது.
பின் அஷ்வின், அமித் மிஸ்ரா பந்துவீச்சை விளாசித் தள்ளிய சங்ககரா, திசாரா பெரேரா சேர்ந்து கோப்பையை உறுதி செய்தனர். தனது கடைசி ‘டுவென்டி–20’ போட்டியில் பங்கேற்ற சங்ககரா, அரைசதம் கடந்து அசத்தினார். அஷ்வின் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பெரேரா, சுலப வெற்றியை தேடித்தந்தார். இலங்கை அணி 17.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ‘டுவென்டி–20’ உலக கோப்பையை முதல் முறையாக வென்றது. சங்ககரா(52 ரன், 6 பவுண்டரி, 1 சிக்சர்), பெரேரா(23 ரன், 3 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் தேடியது.
ஆட்டநாயகன் விருதை சங்ககரா, தொடர் நாயகன் விருதை விராத் கோஹ்லி வென்றனர்.
கேப்டன் செய்த தவறு
இந்திய அணியின் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த தவறினார் கேப்டன் தோனி. முக்கியமான பைனலில் முகமது ஷமியை சேர்த்திருக்க வேண்டும். மாறாக மீண்டும் மோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளித்து அதிர்ச்சி கொடுத்தார். கடந்த போட்டிகளில் தடுமாறிய யுவராஜுக்கு பதில் ரெய்னா அல்லது தோனி முன்னதாக களமிறங்கியிருந்தால், விரைவாக ரன் சேர்த்திருக்கலாம்.
18 ஆண்டுகளுக்கு பின்…
கடந்த 1996ல் உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இலங்கை அணி, அதன்பின் 2007, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை, 2009, 2012ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது. ஆனால் ஒருமுறை கூட கோப்பை வெல்ல முடியவில்லை. நேற்றைய ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில், இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி, 18 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பை வென்றது. தவிர, 2011ல் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) பைனலில், இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
மீண்டும் முதலிடம்
‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில், இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி, ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ அணிகளுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) 133 புள்ளிகளுடன் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி 130 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் அணி (120 புள்ளி) மூன்றாவது இடத்தில் உள்ளது.
முதன்முறை
இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி, ‘டுவென்டி–20’ உலக கோப்பை அரங்கில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக இரண்டு முறை (2009, 2012) பைனலுக்கு முன்னேறிய இலங்கை அணி, தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது.
* தவிர, ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் எந்த ஒரு அணியும் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இதுவரை இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), வெஸ்ட் இண்டீஸ் (2012) அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றன.
வெற்றியுடன் ஓய்வு
சமீபத்தில் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் இருந்து இலங்கையின் சங்ககரா, மகிளா ஜெயவர்தனா ஓய்வை அறிவித்தனர். நேற்றைய பைனல் மூலம், தங்களது கடைசி சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாடிய இவர்கள், வெற்றியுடன் விடை பெற்றனர். இதுவரை சங்ககரா 56 போட்டியில் 1382 ரன்கள் எடுத்துள்ளார். மகிளா ஜெயவர்தனா 55 போட்டியில் 1493 ரன்கள் எடுத்துள்ளார்
ஜெயவர்தனா ‘1000’
இலங்கையின் மகிளா ஜெயவர்தனா 8வது ரன்னை கடந்த போது, ‘டுவென்டி–20’ உலக கோப்பை அரங்கில் 1000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவர், 31 போட்டியில் 1016 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (807 ரன்கள்), இலங்கையின் தில்ஷன் (764) உள்ளனர். இந்தியா சார்பில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 585 ரன்கள் எடுத்துள்ளார்.
319
இம்முறை அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த இந்தியாவின் விராத் கோஹ்லி, ஒரு ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக 2009ல் நடந்த தொடரில், 7 போட்டியில் 317 ரன்கள் எடுத்த இலங்கையின் தில்ஷன் இருந்தார்.
அதிக அரைசதம்
நேற்று அரைசதத்தை பதிவு செய்த இந்தியாவின் விராத் கோஹ்லி, ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் ஹைடனுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 4 அரைசதம் அடித்தனர்.
இது குறைவு
‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றின் பைனலில் முதலில் பேட் செய்து மிகக் குறைந்த ஸ்கோரை நேற்று இந்தியா(130/4) பதிவு செய்தது. இதற்கு முன் 2012ல் நடந்த பைனலில் வெஸ்ட் இண்டீஸ் அணி (137/6, எதிர், இலங்கை) குறைவான ஸ்கோரை எடுத்திருந்தது.
312 total views, 1 views today