தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆய்வு செய்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் நேற்று அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குசாவடி மையங்களில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆய்வு செய்தார்.
அப்போது பழனிபேட்டையில் உள்ள ஆர்.சி.எம்.பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குசாவடி மையத்திற்கு சென்று பார்வையிட்டார். வாக்காளர்கள் வாக்கு அளிப்பதற்கான வசதிகள், பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த அவர் மாற்றுதிறனாளிகள் வாக்கு அளிப்பதற்கு சாய்தளம் அமைக்கப்பட்டு உள்ளதா என பார்வையிட்டார். பின்னர் அவருடன் சென்ற தாசில்தார் மீனாட்சிபெருமாள் மற்றும் அதிகாரிகளிடம் சில ஆலோசனைகள் வழங்கினார்.
முன்னதாக ஆய்வுக்கு வந்த கலெக்டர் ஆர்.சி.எம்.பள்ளியில் ஆய்வு செய்த போது அந்த பள்ளி வளாகத்தில் உள்ள அன்பு இல்லத்தில் தங்கி படிக்கும் மாணவிகள் அங்கு விளையாடி கொண்டு இருந்தனர். அந்த குழந்தைகளை அழைத்து ‘‘அன்பு இல்லத்தில் எத்தனை மாணவிகள் தங்கி படித்து வருகிறீர்கள். உங்களுக்கு சாப்பாடு சரியாக தருகிறார்களா, உங்களுக்கு உள்ளே தங்குவதற்கு வசதிகள் எவ்வாறு உள்ளது?’’ என்று மாணவிகளிடம் கேட்டார். ‘‘எங்களுக்கு எந்த குறையும் இல்லை’’ என்று மாணவிகள், கலெக்டரிடம் கூறினார்கள். ‘‘ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் என்னை நேரில் அணுகலாம்’’ என காப்பாளரிடம் கலெக்டர் தெரிவித்தார்.
281 total views, 1 views today