‘‘உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் கார்ல்சனை வீழ்த்த பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளேன்,’’ என, விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் இந்தியாவின் ஆனந்த். 44. கடந்த ஆண்டு சென்னையில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தடுமாறிய இவர், நார்வேயின் இளம் கார்ல்சனிடம் பட்டத்தை பறிகொடுத்தார்.
சமீபத்தில் நடந்த கேண்டிடேட்ஸ் தொடரில் எழுச்சி பெற்ற ஆனந்த், சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், வரும் நவம்பரில் நடக்கவுள்ள உலக சாம்பியன் தொடரில் மீண்டும் கார்ல்சனை சந்திக்கிறார்.
இது குறித்து நேற்று சென்னை திரும்பிய ஆனந்த் கூறியது:
கேண்டிடேட்ஸ் தொடரில் 9 சுற்று முடிந்தவுடனேயே, வெற்றி பெறுவேன் என தெரிந்துவிட்டது.
கடந்த ஆண்டு சென்னையில், கார்ல்சனுடன் தோற்றதிலிருந்து, மீண்டு வந்துவிட்டேன். இதிலிருந்து ‘பாசிட்டிவ்’ விஷயங்கள் அதிகம் கிடைத்தன. தற்போது, கார்ல்சனுக்கு எதிரான முக்கிய போட்டிக்கு மீண்டும் தயாராகி வருகிறேன். இது நெருக்கடி தருகிறதா என சொல்வது கடினம். அடுத்த சில மாதத்தில், இதற்கான திட்டத்தையும், படிப்படியாக உருவாக்கவுள்ளேன். இது பற்றி தற்போதே சொல்ல முடியாது. இதில் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன்.
இவ்வாறு ஆனந்த் கூறினார்.
174 total views, 1 views today