ராணிப்பேட்டை காரையில் வாக்குப் பதிவு மையத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை காரை 18–வது வார்டில் உள்ள 151 எண் வாக்குப்பதிவு மையத்தில் நேற்று மதியம் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதுதொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த பூத் ஏஜெண்டு தண்டபாணி, பூத்தில் இருந்த அ.தி.மு.க. பூத் ஏஜெண்டை சாப்பாட்டிற்கு மாற்றுவதற்காக வந்த அ.தி.மு.க. நிர்வாகி சத்தியநாதன் (41), சவுந்தர் ராஜன் (26) ஆகியோர் தன்னை ஆபாசமாக திட்டி செருப்பால் தாக்கியதாக ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதே போல் அ.தி.மு.க. நிர்வாகி சத்தியநாதன் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த தி.மு.க.வை சேர்ந்த பாண்டியன் (40), தண்டபாணி (40) ஆகியோர், ஓட்டு போடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் தன்னை அசிங்கமாக திட்டி தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார்.
இவ்வாறு வாக்குப்பதிவு மையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தாக்கி கொண்டதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் மாறி மாறி கொடுத்த புகார்களின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை காரையில் வாக்குப்பதிவு மையத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
321 total views, 1 views today