வேலூர் ,திருப்பத்தூர் அருகே மட்றப்பள்ளியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் 5 ஆயிரம் தீப்பந்தங்களுடன் அம்மன் கரக ஊர்வலம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்….திருப்பத்தூர் அருகே உள்ள மட்றப்பள்ளியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடந்தது. இதனையொட்டி விநாயக பெருமான், முத்துமாரியம்மனுக்கு பால், பொங்கல் அபிஷேக ஆராதனையும், அம்மனுக்கு கூழ், நெய்வேதியம் செய்து வினியோகம் செய்தலும் நடந்தது. பின்னர் கோவிலில் இருந்து விநாயகர், கரகட்டம்மன், முத்துமாரியம்மன் சுவாமிகள் ஆற்றுக்கு புறப்படுதலும் நடந்தது.
வெள்ளிக்கிழமையன்று இரவு 11 மணி அளவில் கரக அலங்காரத்துடன் 5 ஆயிரம் தீபந்தங்களுடன் நையாண்டி மேளம் முழங்க அம்மன் கரகம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தீப்பந்தம் ஏந்தி கொண்டு பக்தி பரசவத்துடன் ஊர்வலமாக சென்றனர்.இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
192 total views, 1 views today