பா.ஜ.க. கூட்டணியின் வேலூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.சி. சண்முகம் டெல்லியில் ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்கை, புதிய நீதி கட்சியின் நிறுவனர்–தலைவர் ஏ.சி.சண்முகம் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, புதிய நீதிக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தாமரை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தனது மகிழ்ச்சியினை தெரிவித்தார்.

புதிய நீதிக்கட்சிக்கு, கூட்டணியில் வேலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததற்கு தனது நன்றியையும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு புதிய நீதிக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அயராது பாடுபடுவார்கள் என்றும், நரேந்திரமோடி இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நாளை இந்தியாவே ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக அவர், பா.ஜ.க.வின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர் ராவ், தேசிய செயலாளர் இல.கணேசன், அமைப்பு செயலாளர் மோகன்ராஜ் ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மேற்கண்ட தகவல் புதிய நீதிக்கட்சியின் பொருளாளர் ஏ.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

199 total views, 2 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.