”பா.ஜ., நிர்வாகிகளும், பா.ஜ., ஆதரவாளர்களும், விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவது, பிரசாரத்தின் போக்கை திசை மாற்றி விடும்,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
பா.ஜ., ஆதரவு அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான பிரவீன் தொகாடியா, பீகார் மாநில பா,ஜ., மூத்த தலைவர் கிரிராஜ் சிங் போன்றோர், சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து, எதிர்க்கட்சியினர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி நேற்று கூறியுள்ளதாவது:இது, தேர்தல் நேரம். பா.ஜ., நிர்வாகிகளும், நம் நலம் விரும்பிகளும், தேவையில்லாத, வெறுப்பூட்டும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு தெரிவிப்பது, பிரசாரத்தின் போக்கை திசை திருப்பி, எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விடும்.
ஆதரிக்க மாட்டேன்
இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை, எப்போதும் ஆதரிக்க மாட்டேன். தேவையற்ற விஷயங்களை பேசுவதை தவிர்த்து, நாட்டின் வளர்ச்சி குறித்த விஷயங்களையும், சிறப்பான நிர்வாகத்தை ஏற்படுத்துவது குறித்தும், பிரசாரத்தில் தெரிவிக்கலாம்.
தற்போது, நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும், பா.ஜ., சிறப்பான நிர்வாகத்தை தரும் என, கருதுகின்றனர். எனவே, அதற்கேற்ற வகையில், நம் பிரசாரம் அமைய வேண்டும். சின்ன, சின்ன விஷயங்களை பொருட்படுத்த வேண்டாம்.இவ்வாறு, மோடி கூறி உள்ளார்.
207 total views, 1 views today