மலேசிய விமானத்தில் பயணித்தவர்களுக்கு இறுதி சடங்கு

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய விமானத்தில், மலேசிய தமிழர் ஒருவர் பயணித்துள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது.

மலேசியாவின், கோலாலம்பூர் நகரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீனாவின், பீஜிங் நகரை நோக்கி புறப்பட்ட விமானம், மாயமானது. மூன்று வாரங்களாகியும், இந்த விமானத்தின் கதி என்னவானது என்பது, இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

‘இந்திய பெருங்கடலில், இந்த விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம்; அதனால், அதில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை’ என, மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். இந்த விமானத்தில், சென்னையை சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டு தமிழரான, முக்தேஷ் என்பவர் உட்பட, 239 பேர், பயணித்துள்ளனர். பிரிட்டன் செயற்கைகோள் அளித்த சிக்னல் தகவலின் அடிப்படையில், இந்த விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளானதாக கருதப்படுகிறது. இனிமேலும் பயணிகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த விமானத்தில் பயணித்தவர்களுக்கான இறுதி சடங்குகள், நடைபெற்று வருகின்றன.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், டாவோயிஸ்ட், புத்த மதத்தினர் என, பலதரப்பட்ட பயணிகள், இந்த விமானத்தில் பயணித்துள்ளதால், அவரவர் மத சம்பிரதாயப்படி, இறுதி சடங்கு நடைபெற உள்ளது. ‘இறந்தவர்களின் உடல் கிடைக்காவிட்டால் பரவாயில்லை’ என, கிறிஸ்தவர்களும், புத்த மதத்தினரும், இறுதி சடங்குகளை நடத்தி வருகின்றனர். ‘இறந்தவர்களின் உடல் கிடைத்தால் தான், சடங்குகளை செய்வோம்’ என, முஸ்லிம்கள் கூறியுள்ளனர்.

மலேசியாவில் வசிக்கும் தமிழர், சுப்பிரமணியம் என்பவர் குறிப்பிடுகையில், ”என் மகன், புஷ்பநாதன், 34, இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் உயிரோடு திரும்புவார் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது,” என்றார்.

மலேசிய பல மதங்களின் கவுன்சில் தலைவர், ஜாகிர் சிங் குறிப்பிடுகையில், ”விமானத்தில் பயணித்தவர்களுக்கு அரசு சார்பில் நினைவாஞ்சலி நடத்துவதற்கு முன், பயணிகளின் உறவினர்களது சம்மதத்தை பெறுவது அவசியம்,” என்றார்.

விமானம் விபத்துக்குள்ளானால், அது தொடர்பான முழு விவரங்களையும், ‘கருப்பு பெட்டி’ மூலம் அறியலாம். பெயருக்கு இதை கருப்பு பெட்டி என, அழைத்தாலும், இது ஆரஞ்ச் நிறத்தினாலானது. விமானத்தின் வேகம், சென்ற திசை, விமானிகள் அறையில் நடந்த உரையாடல் உள்ளிட்ட, 25 மணி நேர தகவல்கள், இந்த, ‘டேட்டா ரெக்கார்டரில்’ பதிவாகியிருக்கும். இந்த கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் உரையாடல்களை, நேரடியாக கேட்க முடியாது.

அதற்குரிய உபகரணத்தை பயன்படுத்தி தான், அறிய முடியும். கருப்பு பெட்டியில் பயன்படுத்தப்படும், ‘பேட்டரி’ யின் திறன், ஒரு மாதத்தில் காலாவதியாகி விடும். இதன் படி, 8ம் தேதியிலிருந்து கணக்கு பார்த்தால், அடுத்த மாதம், 8ம் தேதிக்குள் பேட்டரி காலாவதியாகி விடும். மேலும் ஐந்து நாட்கள் வரை, பேட்டரி உழைக்க வல்லது. எனவே, வரும், 12ம் தேதிக்குள் கருப்பு பெட்டி கிடைத்தால் தான், விபத்துக்குரிய தகவல்கள் தெரியவரும்.

கருப்பு பெட்டியை தேடும் அமெரிக்க கப்பல், ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளது. 13 கி.மீ., சுற்றளவு, 15 ஆயிரம் அடி ஆழத்திற்குள், கருப்பு பெட்டி விழுந்திருந்தால், அதை, இந்த கப்பலில் உள்ள கருவி மூலம், கண்டறிந்து விடலாம்.

310 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.