வேலூர் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டி கோவில்களில் வருண யாகம் மற்றும் ஜெபம் நடந்தது. இந்த யாகம் 3 நாட்கள் நடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. 2014ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மாவட்டத்தில் மழையே பெய்யவில்லை. அத்துடன் கோடையும் வந்து விட்டதால் நாளுக்கு நாள் வெப்பமும் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் மக்கள் நெருப்பு ஆற்றில் நீந்திச்செல்வதுபோல் செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் மழை பெய்யவில்லையென்றால் நிலைமை மோசமாக போய்விடும்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுத்துறையின் கீழ் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில்களில் மழை வேண்டி 3 நாட்கள் யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மழை வேண்டி நடத்தும் யாகத்துக்கு பலன் கிடைத்துள்ளதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர் நரசிம்மசாமி கோவில், ரத்தினகிரி பாலமுருகன் கோவில், விரிஞ்சிபுரம் மார்கபந்தீசுவரர் கோவில், வேலப்பாடி வரதராஜபெருமாள் கோவில், பேரிப்பேட்டை காளியம்மன் கோவில், வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில், வாலாஜா விநாயகர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்தப்படுகிறது.
இதனை முன்னிட்டு நேற்று காலை கோவில்களில் காலை 6 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, கணபதி பூஜை, நவகலச வருண ஜபபூஜை, முதற்கால யாகசாலை பூஜை ஹோமம், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூர்ணாஹுதி, மழை வேண்டி கூட்டு பிரார்த்தனையும், மாலை 6 மணிக்கு மங்கள இசை, 2–ம் கால யாகசாலை பூஜை ஹோமம், வருண ஜபம், இரவு 8 மணிக்கு மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை ஆகியவை நடந்தது.
பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் 3 நாள் யாகம் நேற்று தொடங்கியது. இதனையொட்டி 108 மூலிகைகள் மேளதாளங்கள் முழங்க கோவிலில் பக்தர்களுடன் வலம் வந்து யாக குண்டத்தை அடைந்தது. அங்கு கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. அதன்பின் 108 மூலிகைகளும் யாக குண்டத்தில் இடப்பட்டு யாகங்கள் தொடங்கியது. கோவில் சிவாச்சாரியார்கள் டி.எஸ்.சந்திரசேகர், எஸ்.சுதாகர், உமாசுதன், நடராஜகுருக்கள் ஆகியோர் யாகத்தை நடத்தி வருகின்றனர்.
யாகத்தில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மூலிகையும் ஒரு வித சக்தி வாய்ந்தது. அவ்வாறு 108 மூலிகைகளையும் குண்டத்தில் உள்ள அக்னியில் போடப்படும் நேரத்தில் கூறப்படும் மந்திரத்தின் ஒலியானது அக்னியிலிருந்து வெளிப்படும் மூலிகை புகையுடன் வானவெளிக்கு சென்று அங்கு மழை பெய்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுவதால் இந்த யாகம் நடத்தப்படுவதாக கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
இன்று (செவ்வாய்கிழமை) யாகம் நடைபெறும் கோவில்களில் மங்கள இசை, 3–ம் கால யாகசாலை பூஜை ஹோமம், வருண ஜபம், அபிஷேகம், பூர்ணாஹுதி, பக்தர்கள் அனைவரும் சேர்ந்து மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.
நாளை காலை 7 மணிக்கு வருண ஜபம், வருண ஹோமம், மகாபூர்ணாஹுதி, தீபராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
409 total views, 1 views today