மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராஜேந்திர ரத்னு தொடங்கி வைத்தார். மேலும் ‘என் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.

அதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் மூலம் நேற்று காலை 8 மணிக்கு விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இந்த ஊர்வலத்தில் ‘என் வாக்கு விற்பனைக்கு இல்லை’, ‘ஒவ்வொருவரும் வாக்களிப்பது கடமை’ போன்றவற்றை அவர்கள் வலியுறுத்தியவாறு கோஷங்களை எழுப்பிச்சென்றனர்.

வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தை கலெக்டர் ராஜேந்திரரத்னு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ‘என் ஓட்டு விற்பனைக்கு இல்லை’ என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து அதில் கையெழுத்து போட்டார். இதில் ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் ராஜேந்திரரத்னு கூறுகையில், “நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் மனசாட்சி படியும், நேர்மையாகவும் தங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கள் (பயிற்சி) செந்தில்ராஜ், பட்டாபிராமன், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கேசவலு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன், தாசில்தார் முரளி, தேர்தல் தாசில்தார் தமீம், ஊரீசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் ராஜசேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

257 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.