காட்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்கு 135 முதலுதவி பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந்தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்கள் பள்ளிகளில் செயல்பட உள்ளன. தொகுதி முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்ள பள்ளிகளில் வாக்காளர்களின் வசதிக்காக முதலுதவி பெட்டிகள் வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி காட்பாடி தாலுகா அலுவலகத்தில் முதலுதவி பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையம் உள்ள பள்ளிக்கும் ஒரு முதலுதவி பெட்டி அனுப்பப்பட உள்ளது. இந்த பெட்டியின் உள்ளே ஓ.ஆர்.எஸ்.கரைசல் 5 பாக்கெட்டுகள், 10 பாராசிட்டமல் மாத்திரைகள், 10 டைகுளோசில் மாத்திரைகள், பாண்டேஜ் துணி ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாக்காளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டாலோ, தலைவலி வந்தாலோ அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படும். வாக்குச்சாவடி மையங்களில் தவறி கீழே விழுந்தாலோ அல்லது சிறு காயம் ஏதாவது ஏற்பட்டாலோ அவர்களுக்கு கட்டுப்போட பாண்டேஜ் துணி வைக்கப்பட்டுள்ளது.
இதனுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்து செல்லப்படும் அழியாத மை, வாக்காளர் பட்டியல், கவர்கள், அட்டைகள், பார்வையற்றவர்கள் வாக்குப்பதிவு செய்யும் பிரெய்லி பேப்பர்கள், பாலிதீன் கவர்கள் ஆகியவற்றை ஊழியர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இவற்றை தாசில்தார் மணி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்து செல்ல 135 முதலுதவி பெட்டிகளும், வாக்குச்சாவடி பொருட்களும் தயார் நிலையில் உள்ளன. இவை வருகிற 23–ந் தேதி காட்பாடி தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்பப்படும் என்றார்.
234 total views, 1 views today