வேலூர் மற்றும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் தேர்தல் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், வேலூர் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளிலும் 3,272 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடியில் அரசின் பல்வேறு துறையில் பணியாற்றும் ஊழியர்களும், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் 15 ஆயிரத்து 967 ஆசிரியர்களும் அலுவலர்களாக ஈடுபட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சிகளும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளுக்கும் 6 ஆயிரத்து 970 வாக்குப்பதிவு எந்திரங்களும், 3 ஆயிரத்து 440 கட்டுப்பாட்டு கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. இவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடோனிலும், பாகாயத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கிடங்கிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
பெயர், சின்னம் ஒட்டும் பணி
இந்த எந்திரங்களை வாக்குப்பதிவுக்கு தயார்படுத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. முதற்கட்டமாக சட்டமன்ற வாரியாக கணினி முறையில் பிரிக்கும் பணி நடந்தது. இந்த பணி நிறைவு பெற்றதையடுத்து நேற்று 2–வது கட்டமாக அந்தந்த பூத்களுக்கு வாக்கு எந்திரங்களை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் தாலுகா வாரியாக அனுப்பப்பட்டன.
வேலூர் தொகுதியில் 24 வேட்பாளர்களும், அரக்கோணம் தொகுதியில் 27 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்களது பெயர்கள் மற்றும் சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டுகள் ‘பேலட் பேப்பர்’ ஏற்கனவே சென்னையில் அச்சடிக்கப்பட்டு வேலூருக்கு அனுப்பப்பட்டன.
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது. ஒவ்வொரு தாலுகாவிலும் 100–க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை மின்னணு எந்திரத்தில் பொருத்தும் பணியில் (ஒட்டும் பணி) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணியை வேலூர் உதவி கலெக்டர் பட்டாபிராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் முரளி உள்பட பலர் உடன் இருந்தனர்.
காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றும் வரும் பணிகளை தேர்தல் பார்வையாளர் சஞ்சய் குப்தா ஆய்வு செய்தார்.
இந்த பணி இன்றைக்குள் (சனிக்கிழமை) முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
246 total views, 1 views today