தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 5-ந் தேதி ஆகும். இந்த மனுக்கள் 7-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. ஏப்ரல் 9-ந் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் நந்தகோபாலிடமும், அரக்கோணம் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் பலராமனிடமும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வேட்புமனு தாக்கலின் முதல்நாள் அரக்கோணம் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதர் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள்
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்குட்டுவன் நேற்று பிற்பகல் 2-15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அமைச்சர் கே.சி.வீரமணி, விஜய் எம்.எல்.ஏ. தேர்தல் பொறுப்பாளர்கள் முகில், கலைச்செல்வி ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர் செங்குட்டுவன் கலெக்டர் நந்தகோபாலிடம் பிற்பகல் 2-20 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
மாற்று வேட்பாளராக ஆம்பூர் புதுகோவிந்தாபுரத்தை சேர்ந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாலசுப்பிரமணி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோ.ஹரி பிற் பகல் 2-30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர், முன்னாள் அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளருமான பொன்னையன், மாவட்ட செயலாளர் ஏழுமலை, முகம்மதுஜான் எம்.எல்.ஏ. நரசிம்மன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பலராமனிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க.வினர் கூட்டம்
வேட்புமனுத்தாக்கலை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது. அலுவலகம் வருபவர்களை சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனாலும் நேற்று அ.தி.மு.க.வினர் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்ததால் அ.தி.மு.க.வினர் அதிக அளவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். வேட்புமனுத்தாக்கல் செய்யும் அறைக்கு 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் அறை வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
நிகழ்ச்சியின் போது மேயர் கார்த்தியாயினி, துணை மேயர் தருமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் கோவி.சம்பத்குமார், ரவி, சீனிவாசன், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் பாலச்சந்தர், அவைத்தலைவர் எஸ்.ஆர்.சண்முகம், இளைஞர் பாசறை செயலாளர் ரகு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
சுயேச்சை வேட்பாளர்
முன்னதாக வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு திருப்பத்தூர் அக்ரகாரத்தை சேர்ந்த பின்னோக்கி நடக்கும் மனிதன் என்பவர் சுயேச்சையாக வேட்புமனுத்தாக்கல் செய்தார். இதுவரை வேலூர் தொகுதிக்கு 3 பேரும், அரக்கோணம் தொகுதிக்கு 3 பேரும் வேட்புமனுத்தாக்கல் செய்து உள்ளனர்.
287 total views, 1 views today