திருத்தணி: ” விலைவாசியை கட்டுப்படுத்தாத, தமிழக முதல்வர், ஜெயலலிதா, இரண்டு ஹெலிகாப்டரில் பறந்து சென்று, தேர்தல் பிரசாரம் செய்வது நியாயமா?” என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் கேள்விஎழுப்பினார்.
அரக்கோணம் லோக்சபா தொகுதியில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., சார்பில், வழக்கறிஞர், இளங்கோ போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திருத்தணி – அரக்கோணம் சாலை சந்திப்பு அருகே, ஸ்டாலின் பேசியதாவது:மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி உருவாக வேண்டும். கருணாநிதி சுட்டிக் காட்டும் ஒருவர், நாட்டின் பிரதமராக வரவேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும், நாங்கள் வந்து செல்வதில்லை. எந்த சூழ்நிலையிலும், மக்களின் பிரச்னைக்களுக்காக வாதாடி வருகிறோம். அதனால் தான், உங்களிடம் ஓட்டு கேட்க உரிமையோடு வந்து இருக்கிறேன்.தமிழக முதல்வர், ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்வார். அதுவும் ஒன்றல்ல; இரண்டு ஹெலிகாப்டர்களுடன் வருவார். மின்வெட்டு, விலைவாசி, பால்விலை போன்றவற்றை, கட்டுப்படுத்தாத முதல்வருக்கு இரண்டு ஹெலிகாப்டர் தேவை தானா?. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
அரக்கோணம் லோக்சபா தொகுதியில், திருத்தணி, அரக்கோணம், சோழிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியின் தற்போதைய, எம்.பி.,யாக, தி.மு.க.,வின் ஜெகத்ரட்சகன் உள்ளார். அவர் இந்த முறை, இத்தொகுதியில் போட்டியிடாமல், ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுகிறார்.இதற்கு முன், 2004ல், அரக்கோணம் தொகுதியின், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், பா.ம.க.,வின், ஆர்.வேலு.
299 total views, 1 views today