நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைஞர்கள் பாடுபடவேண்டும் என்று டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பேசினார்.
வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் அருளரசு தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் ராஜ்குமார், ஸ்ரீராம்பாபு, பிரவீன்ராஜ் பொருளாளர் முத்துபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் மன்ற தலைவர் தமிழ்செல்வன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் கலந்து கொண்டு பேசியதாவது:–
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு லட்சக்கணக்கான என்ஜினீயர்கள் படித்து விட்டு வருகின்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட பெரிய அளவில் உருவாகவில்லை. நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலை செய்வதை விட நீங்கள் நிறுவனத்தை தொடங்கி 10 பேருக்கு வேலை கொடுக்கவேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும். நம்மை பற்றி குறைவாக மதிப்பீடு செய்து வைத்துள்ளீர்கள். அதனை மாற்றி உலகில் உள்ள அனைத்து சக்திகளையும் பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கவேண்டும்.
இந்தியாவில் அதிகமான இளைஞர்கள் சக்தி கொண்ட நாடாகும். படிக்கிற நீங்கள் அனைத்தையும் எளிதாக எடுத்து கொள்கிறீர்கள். சில நேரங்களில் சீரியசாக எடுத்து கொள்ளவேண்டும். கிராமப்புற பகுதிகளில் இருந்து வந்து ஜெயிப்பதுதான் முக்கியம்.
இந்தியர்கள் அனைவரும் நுகர்வோர்களாகத்தான் உள்ளனர். இதனால் தான் உலகநாடுகள் அனைத்து இந்தியாவை சந்தையாக பயன்படுத்துகின்றனர். நாம் புதிய கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
ஆங்கிலம் என்பது கூடுதல் பலம்தான். நீங்கள் ஆங்கிலம் பேசுவதால் வேலை தருவதில்லை. உங்களின் ஆளுமைத்திறன், பிரச்சினையை எதிர்கொள்ளும் தைரியம், சிந்தனை, உங்களின் திறமை ஆகியவை கொண்டு வேலை தருகின்றனர்.
ஆர்வத்துடன் படிக்க வேண்டும்
கல்வியை நீங்கள் ஆர்வத்துடன் படிக்கவேண்டும். அப்போதுதான் அவை உங்களுக்கு எளிதாக இருக்கும். திறமை படைத்த நீங்கள் உலகம் உங்களை திரும்பி பார்க்கும் வகையில் புதியவற்றை கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து கல்லூரியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
492 total views, 2 views today