சொத்துவரி, தொழில்வரிகளை வருகிற 31–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்

வேலூர் மாநகராட்சியில் தொழில் வரி, சேவை வரி, சொத்து வரி, குழாய் கட்டணம் ஆகியவற்றை வருகிற 31–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி கூறினார்.

வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இவை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 15 வார்டுகளுக்கு ஒரு மண்டல அலுவலகம் என்ற வகையில் இயங்கி வருகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த மண்டல அலுவலகத்தில் சொத்துவரி, தொழில்வரி, சேவை வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர்.

மேலும் புதிதாக வீடு கட்டி குடியிருப்பவர்களும் அதுபோல கடைகள், வணிக வளாகம் கட்டியிருப்பவர்களும் தங்கள் கட்டிடங்களுக்கு வரி விதிக்க மாநகராட்சிக்கு வந்து செல்கின்றனர்.

வரிவசூல் பணி தீவிரம்

வேலூர் மாநகராட்சியில் தற்போது வரிவசூல் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஆட்டோ, தண்டோரா மூலம் வீதி, வீதியாக சென்று உடனடியாக வரி செலுத்தும்படி அறிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பொது மக்கள், வியாபாரிகள், அலுவலர்களிடம் இருந்து பெறப்படும் சொத்து வரி. தொழில் வரி, குடிநீர் வரி, வாடகை மற்றும் பல்வேறு இனங்களில் இருந்துதான் மாநகராட்சி மக்கள் நலத்திட்டங்களை செய்திட முடியும். மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு மட்டும் வரி பாக்கியாக சுமார் ரூ.13 கோடி இருந்தது. அதைத்தொடர்ந்து எடுத்த பல்வேறு தீவிர நடவடிக்கையின் காரணமாக ரூ.9 கோடி வசூல் ஆனது. மீதமுள்ள ரூ.4 கோடியை வசூலிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது வரிவசூல் பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 31–ந் தேதிக்குள் வரிகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, ஆட்டோ, தண்டோரா, வேன் ஆகியவற்றில் மாநகராட்சி அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

இதன்மூலம் தற்போது வரிகளை பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர். தற்போது சுமார் 60 சதவீதம் வரிகள் வசூலிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள வரிகளையும் விரைவில் வசூலிக்கப்படும். கட்டாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

333 total views, 2 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.