ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதா? காங்., மீது நரேந்திர மோடி பாய்ச்சல்

ஓட்டு வங்கி அரசியலுக்காக, காங்கிரசும், சமாஜ்வாதியும், மதச்சார்பின்மை என்ற பெயரில், முஸ்லிம் மக்களை, தவறாக வழி நடத்துகின்றன,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.


உ.பி., மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அலிகாரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று பேசினார்.

அவர் பேசியதாவது:நாடு முழுவதும், முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும், 90 மாவட்டங்களில், 12 அம்ச வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியதாக, காங்., தலைவர் சோனியா, சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், ‘இந்த திட்டத்தின் கீழ், என்ன பணிகள் நடந்தன?’ என, ஒரு எம்.பி., கேள்வி எழுப்பியதற்கு, சோனியாவிடமிருந்து, எந்த பதிலும் இல்லை.இந்த திட்டத்துக்காக, ஒரு நயா பைசாவை கூட, மத்திய அரசு செலவு செய்யவில்லை. ஓட்டு வங்கி அரசியலுக்காக, மதச்சார்பின்மை என்ற பெயரில், முஸ்லிம் மக்களை, காங்கிரஸ் கட்சி, எந்த அளவுக்கு தவறாக வழி நடத்துகிறது என்பதற்கு, இது, நல்ல உதாரணம். சமாஜ்வாதி கட்சியும், இதே நடைமுறையைத் தான் பின்பற்றுகிறது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும், காங்கிரஸ் கட்சியினர் தொடர்புடன், 700 கலவரங்கள் நடந்துள்ளன. அதேபோல், சமாஜ்வாதி ஆட்சி நடக்கும், உ.பி.,யில், 250 கலவரங்கள் நடந்துள்ளன. எனவே, மத கலவரங்களுக்கு பா.ஜ., மீது பழி போட்டு, இவர்கள் தப்பிக்க முடியாது. உ.பி.,யில், காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டியை பார்க்கும் போது, ‘டிவி’யில், மல்யுத்தப் போட்டியைப் பார்ப்பது போல் இருக்கிறது.இவ்வாறு, மோடி பேசினார்.

178 total views, 2 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.