தேர்தல் களத்தில், விஜயகாந்தும், அவரின் மனைவி பிரேமலதாவும் தான், அ.தி.மு.க.,வையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த நிலையில், இதே பாணியில் ஆளும் கட்சியை மேடைகளில் வறுத்தெடுப்பவர், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ.
பதிலடி கொடுக்க
இவர்கள் வீதி பிரசாரங்களிலும், மேடை பிரசாரங்களிலும் விமர்சித்து வருவது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அவர்களுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளார். அதனால், கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்களிடம், மூவரையும் விமர்சிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.குறிப்பாக, விஜயகாந்த் குறித்து, அவர் கூடவே இருந்து அரசியல் செய்த, தலைவர்களை விட்டு விமர்சித்தால், நன்றாக இருக்கும் என, தீர்மானித்தார். அதனால், அதற்கான, ‘அசைன்மென்ட்’டை, தே.மு.தி.க.,வில் அவைத் தலைவராகவும் எதிர்கட்சித் துணை தலைவராகவும் இருந்து பணியாற்றி, திடுமென அ.தி.மு.க.,வில் இணைந்துள்ள, பண்ருட்டி ராமச் சந்திரனிடம் கொடுத்துள்ளார்.அதனால், தனக்கு முன், தே.மு.தி.க.,வில் அதிருப்தியாகி, அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த, எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேரையும், இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்த, பண்ருட்டி ராமச்சந்திரன் தீர்மானித்து, அவர்களை களமிறக்கி உள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தே.மு.தி.க., வில், எம்.எல்.ஏ.,க் களாக இருந்தவர்கள் சிலர், விஜயகாந்தின் அரசியல் ரீதியான செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்து, அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு எடுத்தனர். ஆனால், அதற்கு அ.தி.மு.க., தரப்பு தான் காரணம் என, நினைத்து, விஜயகாந்தும் அவருடைய மனைவியும் மேடை தோறும், கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடுமையான விமர்சனம்:
அந்த கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த, பண்ருட்டி ராமச்சந்திரன், தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அதனால், ஆலந்துார் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, வந்த விஜயகாந்தின் மனைவி பிரேம லதா, ராமச்சந்திரனை செத்த பிணத்துக்கு சமம் என்று, கடுமையாக விமர்சித்ததோடு, அவரை அ.தி.மு.க.,வில் சேர்த்த ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்தார்.சமீபத்தில், வைகோவிற்கு ஆதரவாக, விருதுநகரில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது வைகோ பேசும்போது, ‘விஜயகாந்தால், கட்சி பதவி, அரசியல் பதவி வழங்கப் பெற்றவர்கள், அவருக்கு துரோகம் செய்து சென்று விட்டனர்’ என, பேசினார். இதனால், தன் எரிச்சல் பட்டியலில் வைகோவையும் இணைத்து, அவரையும் கடுமையாக விமர்சிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு சரியான நபர்களாக இருப்பவர்கள், தே.மு.தி.க.,விலிருந்து அதிருப்தியாகி, அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கும், எம்.எல்.ஏ.,க்கள் தான்.
பிரசார திட்டம்
இதையடுத்து, வைகோ மற்றும் விஜயகாந்திற்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கான பிரசாரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியலில், விஜயகாந்த் சகோதரர் மனைவியும் இணைக்கப்பட்டிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க., தலைமை செய்து கொடுத்துள்ளது. இவர்கள் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம், இந்த வாரம் விருதுநகரில் நடக்கவுள்ளது. அப்போது, வைகோ மற்றும் விஜயகாந்திற்கு எதிராக, இவர்கள் ஒன்றிணைந்து முழக்கமிட உள்ளனர்.இதை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், திருப்பூர், தென்காசி, தேனி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட தொகுதிகளில், தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர்.இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.பண்ருட்டி ராமச்சந்திரன் குழுவின் தேர்தல் பிரசாரம், தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான விடை, விரைவில் தெரியும்.
217 total views, 2 views today