சேலம்: ”எதிர்காலத்தில், நாடு போகிற போக்கில், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதை தான் விரும்புகிறேன். மதச்சார்பற்ற அரசுக்கு யார் கை கொடுத்தாலும், அவர்களிடம், ‘கை’ குலுக்கி வரவேற்க தயாராக இருக்கிறேன்,” என்று சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
சேலம், போஸ் மைதானத் தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:என்னுடைய கலை வாழ்க்கை துவங்கியது, கோவைக்கு அடுத்தபடியாக, சேலத்தில் தான்.
‘மந்திரிகுமாரி’ படத்துக்கு திரைக்கதை எழுதியது இங்கு தான். என்னுடைய நண்பர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக அந்த படத்தில் அறிமுகம் செய்து வைத்தேன். அவ்வாறான சேலத்தில் உள்ள மக்களை சந்திக்க இங்கு வந்துள்ளேன்.கருணாநிதி தனியாக நிற்கிறார்; அவரை கைவிட்டு விட்டனர் என, கூறுகின்றனர். யாரும் என்னை கைவிடவில்லை. எதிர்காலத்தில், நாடு போகிற போக்கில், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதை தான் விரும்புகிறேன்.
மதச்சார்பற்ற அரசுக்கு யார் கை கொடுத்தாலும், அவர்களிடம், ‘கை’ குலுக்கி வரவேற்க தயாராக இருக்கிறேன்.ஜாதி மறுப்பு, மதவாத மறுப்பு போன்ற கொள்கைகளோடு, சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக தி.மு.க., இருக்கும். இப்போது ஆட்சியில் உள்ளவர்கள், நாங்கள் தான், அந்த மக்களுக்கு எல்லாம் என, நாடகம் நடிக்கின்றனர். தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. கடந்த, மூன்று ஆண்டுகளில், கொலை, 3,330, கொள்ளை, 1,223, செயின் திருட்டு, 921, வழிப்பறி மோசடி, 916 என, குற்றங்கள் அதிகரித்து கிடக்கின்றன. திருச்சி மாவட்ட செயலர் நேருவின் தம்பி ராமஜெயம் கொல்லப்பட்டு, இரண்டு ஆண்டாகியும், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு படுகுழிக்குள் தள்ளப்பட்டு விட்டது. மதுரையில், ‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கும், பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி, தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில், 2012ம் ஆண்டில், இந்தியாவில், தற்கொலை மட்டும், 1 லட்சத்து, 36,440. அதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 16,927 தற்கொலைகள் நடந்துள்ளன. அதையெல்லாம் மறந்து, வீராப்பு பேசிக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. நான் கொண்டு வந்த திட்டங்களை தடுத்து நிறுத்துவது தான், அவருடைய சாதனையாக உள்ளது.ஆட்சிக்கு வந்தவுடன், புதிய தலைமைச் செயலகத்தை இடித்து தள்ளினார்; அண்ணா நுாலகத்தை இழுத்து மூடினார்.
அங்கு, வவ்வாலும், எலிகளும், புழுக்களும் புகுந்து கிடக்கின்றன. கடந்த ஆட்சியில் விட்டுப்போன திட்டங்களை தொடர்வது தான், ஒரு நல்ல அரசுக்கு அழகு. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை, மேலும் ஊக்குவிக்கும் வகையில், முட்டை வழங்கி செயல்படுத்தினோம்.நல்ல ஆட்சி அமைய, எனக்கும், என் தலைமையிலான கட்சிக்கும், உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்களில் ஒருவனாக, குடும்பத்தில் ஒருவனாக கருதி, ஆதரவை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
152 total views, 2 views today