தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் 14 ,24,489 ஆண் வாக்காளர்களும், 14 ,51,633 பெண் வாக்காளர்களும், 53 திருநங்கைகளும் என மொத்தம் 28 ,76,175 வாக்காளர்கள் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆண்களை விட 27 ,144 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 24 பேரும், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் 27 பேரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
வேலூர், அரக்கோணம் தொகுதிகளில் 15–க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுவதால் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு மின்னணு இயந்திரத்தில் 15 பெயர்கள் மட்டும் தான் இருக்கும். மேலும் இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக ‘நோட்டா’ பயன்படுத்தப்படுவதால் அதற்கும் ஒரு இடம் வைக்கப்பட்டு இருக்கும்.
வேலூர் தொகுதியில் 1,446 வாக்குச்சாவடிகளும், அரக்கோணம் தொகுதியில் 1,619 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் 2 வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன.
தற்போது வேலூர் மாவட்டத்துக்கு மேலும் ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் தேவைப்படுகிறது. அவை விரைவில் சென்னையில் இருந்து வேலூர் வரும் என்று கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய பூத்சிலிப் வருகிற 13–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வீடு வீடாக வினியோகிக்கப்படுகிறது. இவை அனைத்தும் வருகிற 19–ந் தேதி அல்லது 20–ந் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும். இந்த பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள், வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் ஆகியோர் ஈடுபடுகின்றனர்.
208 total views, 1 views today