வேலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இளஞ்செழியனை ஆதரித்து வாணியம்பாடியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சி.ஞானசேகரன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.
காங்கிரஸ் கட்சியில் புதிய ரத்தத்தை பாய்சுவதற்காக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 இளைஞர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். ஊடகங்கள் தமிழகத்தில் 4 முனை, 5 முனை மற்றும் சில இடங்களில் 6 முனை போட்டி நடைபெறுவதாக கூறுகின்றன. ஆனால் இந்தியாவை ஸ்திரதன்மையோடு வழிநடத்தும் காங்கிரசுக்கும், மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் பா.ஜ.க.வுக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வின் எல்லை தமிழ்நாடு வரைதான். அந்த கட்சிகள் கடந்த 16 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியில் பங்கேற்றதற்கு ஒரே காரணம் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்ததால்தான்.
அ.தி.மு.க., தி.மு.க. வருகிற 2016–ம் சட்டசபை தேர்தலுக்கு ஒத்திகை பார்ப்பதற்காக தான் தற்போது தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றனர். ஆனால் வாக்காளர்களாகிய உங்கள் நோக்கம் எந்த கட்சி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான அரசை அமைக்க முடியுமோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஆகையால் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்.
14 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயகத்தின் உறுப்பினராக சேர்ந்த நரேந்திரமோடி குஜாரத்தில் நடைபெற்ற கலவரத்தில் இறந்தவர்கள் காரில் அடிபட்டு இறக்கும் நாயுடன் ஒப்பிட்டு பேசும் அளவிற்கு கல்நெஞ்சம் கொண்டவர். ஆகையால் சுதந்திர இந்தியாவின் 67 ஆண்டுகளில் பலமுறை காங்கிரஸ் கட்சி முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி அமைத்துள்ளது. 54 ஆண்டுகளில் நிலையான ஆட்சி செய்து பல சட்டங்கள், திட்டங்கள் தந்தது காங்கிரஸ் கட்சி. நிரந்தரமான ஆட்சியை அளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராம்கோபால், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
250 total views, 2 views today