பேஸ்புக் மூலம் புகார் அளிக்கலாம் – ராஜேந்திர ரத்னு

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தெரியவந்தால் பேஸ்புக் மூலம் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு நேற்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 76 ஆயிரத்து 173 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 3 ஆயிரத்து 272 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 469 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவை உள்பட மேலும் 900 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. தேர்தலை பார்வையிட 540 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 970 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 615 பேர் கைது செய்யபட்டுள்ளனர். மேலும் 1154 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தவிர லைசென்ஸ் இல்லாத 16 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் குறித்து பேஸ் புக் மூலம் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான புகார்களை FACEBOOK PAGE (OFFICIAL)DISTRICT COLLECTOR VELLOREGENERAL ELECTION 2014 என்ன பேஸ்புக் முகவரியிலும், 9842678544 என்ற வாட்ஸ் அப் நம்பரிலும், 1800–4257014 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் vellore 2014 complaints @gmail.com என்ற இ–மெயில் முகவரிக்கும் புகார்களை அனுப்பலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறுகையில், ‘‘வேலூர்–அரக்கோணம் தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 9 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் வர இருக்கின்றனர். ஏற்கனவே ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் வேலூர் வந்து விட்டனர். ஒரு குழுவில் 90–க்கும் மேற்பட்ட வீரர்கள் இருப்பார்கள்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு படை போலீஸ், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், வனபாதுகாவலர்கள், என்.எஸ்.எஸ். மாணவர்கள், ஊர்க்காவல் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

எங்காவது ஒரு சிறிய அளவில் விதிமீறல் நடந்தாலும் பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட முகவரிக்கோ அல்லது தொலைபேசிக்கோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்’’ என்றார்.

பேட்டியின்போது அரக்கோணம் தொகுதி தேர்தல் அலுவலர் பலராமன், உதவி கலெக்டர்(பயிற்சி) செந்தில்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) கேசவலு, கலெக்டர் அலுவலக பொது மேலாளர் வில்சன் ராஜசேகர், குற்றவியல் மேலாளர் பாலாஜி ஆகியோர் இருந்தனர்.

222 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.