நம் நாட்டின் அடுத்த நிர்வாகி

‘அனைத்து துறைகளிலும், மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத் முதல்வர் மோடி அல்ல; தமிழகத்தின் இந்த லேடி தான்’ என, தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். வளர்ச்சி பாதையில், குஜராத்தை விட, தமிழகமே முன்னேறி செல்வதாக, சில புள்ளி விவரங்களையும், அவர் அளித்தார்.

ஆனால், தமிழகத்தை விட, குஜராத்தில் தான் சிறந்த நிர்வாகம் இருப்பதாகவும், அதனை ஒவ்வொரு அரசு துறையின் செயல்பாட்டின் மூலம், இங்கு வசிப்பவர்கள் நேரடியாக உணர்ந்துள்ளதாகவும் குஜராத்தில் வசிக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, குஜராத் மாநிலம், பரோடா தமிழ் சங்கத்தின் செயலர் சேகர், ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

உண்மையான வளர்ச்சி

தமிழக முதல்வர் ஜெயலலிதா, எதன் அடிப்படையில் அறிக்கை வாசித்தாரோ தெரியவில்லை; அது உண்மையல்ல. தமிழகத்தை விட குஜராத் மாநிலமே உண்மையான வளர்ச்சி பாதையில் செல்கிறது. இங்கு பதிவு செய்த, 15 நாட்களுக்குள் குடும்ப அட்டையை பெற்று விட முடியும். கைரேகை பதிவுடன் கூடிய, ‘பார்கோடு’ உள்ள, குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதனால், போலி குடும்ப அட்டை பயன்பாட்டுக்கு வராது.ரேஷன் கடைகள் தனியார் நிர்வாகத்தில் இருப்பதால், நுகர்வோரின் எந்தவொரு புகாருக்கும் உடனடியாக தீர்வு கிடைக்கும். அலட்சியம் காட்டினால், தனியாரின் உரிமம் ரத்து செய்யப்படும்.

‘ஸ்மார்ட் கார்டு’

நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களுக்கு, ‘ஸ்மார்ட்

 கார்டு’ வழங்குவது, குஜராத்தில் மட்டுமே. இந்த கார்டில் சொத்து குறித்த அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். இந்த கார்டு இல்லாமல், சொத்தை விற்கவோ, வாங்கவோ முடியாது.இங்கு பசியில் வாடுபவர் என, யாரும் கிடையாது. இலவச தொலைபேசி எண் மூலம் நிலைமையை விளக்கினால், உணவு கிடைப்பதற்கு கூட வசதியுள்ளது. இத்திட்டத்தை, தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய அளவிலான விருது

பொது வினியோகத் திட்டத்தில் இருந்து, உணவு பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பது, குஜராத்தில், 63 சதவீதம் என, தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், பொது வினியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்காக, தேசிய அளவிலான விருதை, குஜராத் அரசுபெற்றிருக்கிறது.

கிராமப்புற மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, ‘ஸ்வாகத்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ், வட்டம், மாவட்ட அளவில், மக்களிடம் பெற்ற புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து, குஜராத் மாநில முதல்வரே, ஒவ்வொரு மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையன்று, மதியம், 3:00 மணிக்கு ஆய்வை மேற்கொள்கிறார்.

பள்ளிப் படிப்பை பாதியிலே கைவிடுபவர்களின் எண்ணிக்கை, குஜராத்தில், 2001ல், 20.9 சதவீதமாக இருந்தது. தற்போது, அது, 2 சதவீதமாக குறைந்துள்ளது. குஜராத்தில், 18 ஆயிரத்து 375 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும், ஆண்டின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும், மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

இரவு, 8:00 மணிக்கு மேல், போக்குவரத்து வசதியில்லாமல் போகும்பட்சத்தில், தகவல் அளிக்கும் பெண்களை, அவர்கள் வீட்டிற்கே பாதுகாப்பாக போலீசார் கொண்டு போய் விடுகின்றனர்.

நான்கு நாட்களில்

வியாபாரத்தை துவங்குவதற்கான, விற்பனை வரி எண்ணை, நான்கு நாட்களில் இங்கு பெற்று விட முடியும். கல்வி பெறும் உரிமை திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, 25 சதவீதம் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் கல்வி வாய்ப்பளிக்க வேண்டும்.இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த, கல்வி அளிப்பதற்கான செலவுதொகையை மாநில அரசு, பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்க வேண்டியது அவசியம். மத்திய அரசின் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தும் நோக்கில், குஜராத் அரசு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், அதற்கான தொகையை முறையாக வழங்குகிறது.

பி.ஆர்.டி.எஸ்.,

பஸ் போன்ற பொது போக்குவரத்து வசதி, மற்ற வாகனங்களை விட விரைவாகவும், வசதியாகவும் இயங்கினால் தான், அதனை மக்கள் நாடுவர். இதனை கருதி, பஸ்களுக்கான தனிப்பாதை அமைத்து செயல்படும், பி.ஆர்.டி.எஸ்., திட்டம் ஆமதாபாத்தில் சிறப்பாக செயல்படுகிறது.இப்படி, அனைத்து துறைகளிலும், தமிழகத்தை விட குஜராத்தில் தான் மக்களுக்கு போதிய வசதி செய்து தருவதில் சிறந்த நிர்வாகமாக உள்ளது என்பதற்கு, இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களே சாட்சி. தேவையென்றால், யார் வேண்டுமானாலும் நேரடியாக குஜராத்திற்கு வந்து இதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

200 total views, 2 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.