வேலூர், அரக்கோணம் தொகுதியில் அமைதியான முறையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் தொகுதிகள் உள்ளன. இதில் வேலூர் தொகுதியில் 24 வேட்பாளர்களும், அரக்கோணம் தொகுதியில் 27 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
வேலூர் தொகுதியில் 13 லட்சத்து 95 ஆயிரத்து 686 வாக்காளர்களும், அரக்கோணம் தொகுதியில் 13 லட்சத்து 5 ஆயிரத்து 866 வாக்காளர்களும் உள்ளனர். இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் 1,673 வாக்குச்சாவடி மையங்களும், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 1,447 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் காலை 6-30 மணி முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு ஆர்வத்துடன் வர தொடங்கினர். ஒரு சில மையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.
வேலூர் தொகுதியில் காலை 9 மணிக்கு 14 சதவீதம், 11 மணிக்கு 30.4 சதவீதம், 1 மணிக்கு 46.3 சதவீதம், 3 மணிக்கு 56.98 சதவீதம், 5 மணிக்கு 69.18 சதவீத வாக்குகள் பதிவாகின. அதேபோல் அரக்கோணம் தொகுதியில் காலை 9 மணிக்கு 8 சதவீதமும், 11 மணிக்கு 28.8 சதவீதம், 1 மணிக்கு 47.2 சதவீதம், 3 மணிக்கு 57.92 சதவீதம், 5 மணிக்கு 66.30 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
வேலூர் மாவட்டத்தில் நேற்று எந்தவித அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் அமைதியான முறையில் தேர்தல் நடந்தது.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி காலை 7.10 மணிக்கு ஜோலார்பேட்டை அருகே புல்லாநேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து, வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமேஷ் தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியிலும், ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர் வசுமதி சீனிவாசன் ஜோலார்பேட்டை தெற்கு நடுநிலை பள்ளியிலும் வாக்களித்தனர்.
வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவன் காட்பாடி அரசு கல்வியியல் கல்லூரியில் ஓட்டு போட்டார்.
முன்னாள் அமைச்சர்கள் விஜய் எம்.எல்.ஏ. வேலூர் முஸ்லிம் மேல்நிலை பள்ளியிலும், முகம்மதுஜான் எம்.எல்.ஏ. ராணிப்பேட்டை ராஜேஸ்வரி நிதியுதவி பள்ளியிலும் வாக்களித்தனர். கலையரசு எம்.எல்.ஏ. அண்ணா நகரில் உள்ள பள்ளியிலும், மேயர் கார்த்தியாயினி காங்கேயநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும் வாக்களித்தனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ. காட்பாடி டான்பாஸ்கோ மேல்நிலை பள்ளியில் ஓட்டு போட்டார்.
தேர்தலை முன்னிட்டு வணிகர்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக வேலூரில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நகைக்கடைகள், அடகுக்கடைகள், பர்மா பஜார், கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள மண்டிகள், நேதாஜி மார்க்கெட் கடைகள், சாரதி மாளிகையில் உள்ள கடைகள் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
282 total views, 2 views today