ஒரு டீக்கடைக்காரன், நம்மை எதிர்க்கிறானே என்ற கோபத்தில், காங்., தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும், போட்டி போட்டு பொய் சொல்லி வருகின்றனர்,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி சாடினார்.
உத்தர பிரதேசத்தின், பதேபூர் நகரில், நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், மோடி பேசியதாவது:அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் கேள்வி கேட்க முடியாமல் இருந்த தங்களை, இந்த டீக்கடைக்காரன் கேள்வி கேட்கிறானே என்ற கோபத்தில், சோனியாவும், ராகுலும் என்னை பலவாறாக தூற்றுகின்றனர்; போட்டி போட்டு பொய் சொல்கின்றனர்.
“குஜராத்தில், “லோக்ஆயுக்தா’ நீதிமன்றம் இருந்திருந்தால், மோடி தப்பித்திருக்க மாட்டார்’ என, ராகுல், விவரம் தெரியாமல் பேசியுள்ளார். குஜராத்தில் லோக் ஆயுக்தா என்ற, மக்கள் நீதிமன்றம் உள்ளது. அந்த நீதிமன்றம் மட்டுமல்ல, சி.பி.ஐ., – ஐ.பி., – ரா போன்ற உளவு அமைப்புகளும், வருமான வரித்துறையும், எவ்வளவோ முயன்றும், என்னை எந்த குற்றத்திலும் சிக்க வைக்க முடியவில்லை.
இந்த விவரம் தெரியாமல் ராகுல், லோக் ஆயுக்தா பற்றி பேசியுள்ளார். குஜராத்தில் உள்ள அந்த நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர், காங்கிரசை சேர்ந்த, முன்னாள் முதல்வர் அமர்சிங் சவுத்ரி; அவர் மகனுக்கு, மத்திய அமைச்சரவையில் இடமளித்துள்ளது, காங்கிரஸ்.
காங்கிரசின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. போட்டியிலிருந்து பிரதமர் தப்பி ஓடுகிறார். அமைச்சர்கள் பலர் போட்டியிட விரும்பவில்லை. போட்டியிட்டால், தோல்வி தான் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர்.இந்த கட்சிகள் செய்த பாவத்தை, புனித கங்கை நதியில் களைவதற்காகத் தான், நான் வாரணாசியில் போட்டியிடுகிறேன். அந்த பணியை, என்னிடம் இறைவன் ஒப்படைத்து உள்ளான்.இவ்வாறு, மோடி பேசினார்.
325 total views, 2 views today