வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் நாளை (புதன்கிழமை) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 3,272 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற உள்ள அரசு அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்குவது, பராமரிப்பது, சீல் வைப்பது போன்றவையும், வாக்குச்சாவடி மையத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்தெந்த மையத்துக்கு அனுப்புவது என்று கணினி முறையில் (ரேண்டம்) குலுக்கல் செய்து எந்தந்த மையம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் அதற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் கொண்டு சென்று அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான நாற்காலிகள், மின் இணைப்பு, மின்விளக்கு, மின்விசிறி வசதிகள், மாற்று திறனாளிகள் வந்து செல்லும் வகையில் சாய்வுதளம், குடிநீர் வசதி, கழிவறை வசதி ஆகிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
மேலும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டு தாலுகா அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்குகிறதா என சரிபார்த்து எந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று பிரித்து வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 3,272 வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், மை, பேப்பர், மெழுகுவர்த்தி, பென்சில், பூத் ஏஜெண்ட் விண்ணப்ப படிவம், வாக்குப்பதிவின் போது மறைத்து வைக்கப்படும் அட்டை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தம் 79 பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்பப்பட உள்ளன.
இந்த பொருட்கள் அனைத்து அந்தந்த தாலுகா அலுவலகங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாளை (புதன்கிழமை) மாலைக்குள் இந்த பொருட்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தாலுகா அலுவலகத்தில் பெற்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு கொண்டு சென்று விட வேண்டும். அவற்றை நாளை இரவே வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவுக்கு தயார்படுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் இந்த பொருட்கள் அனைத்தும் நாளை அனுப்பி வைக்கப்படுகிறது.
277 total views, 1 views today