வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 2014–ம் ஆண்டிற்கான பி.டெக். நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது அதன் முடிவு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த மாணவர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு 2014–ம் ஆண்டிற்கான பி.டெக். சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி, கெமிக்கல் உள்பட 13 பொறியியல் பட்டப்படிப்புகளிலும், சென்னை வி.ஐ.டி. வளாகத்தில் பி.டெக், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பொறியியல் பட்டப் படிப்புகளிலும் சேருவதற்கான நுழைவுத்தேர்வு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்பட்டிருந்த 137 மையங்களில் நடத்தப்பட்டது.
இந்த நுழைவுத் தேர்வை 1,84 ,483 பேர் எழுதினர். அதன் முடிவுகள் இணையதளம் மூலம் நேற்று வெளியிடப்பட்டன. இந்த நுழைவுத் தேர்வில் முதல் 10 இடங்களை மாணவர்களே பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதில் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த மாணவன் வாரி ஆதித்யா வரதன் முதலிடத்தையும், டெல்லி மையத்தில் தேர்வு எழுதிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாணவர் மேனாக் சரண் 2–வது இடத்தையும், ஐதராபாத்தை சேர்ந்த கங்கம் ரோகித் ரெட்டி 3–வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு ரேங்க் அடிப்படையில் பி.டெக். பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங் வருகிற 19–ந்தேதி முதல் 22–ந் தேதி வரை வேலூர் மற்றும் சென்னை வளாகங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. 1 முதல் 8 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு வருகிற 19–ந் தேதியும், 8 ஆயிரத்து ஒன்று முதல் 12 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 20–ந் தேதியும், 12 ஆயிரத்து ஒன்று முதல் 16 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 21–ந் தேதியும், 16 ஆயிரத்து ஒன்று முதல் 20 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 22–ந் தேதியும் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
வி.ஐ.டி. நுழைவுத் தேர்வில் 1 முதல் 50 வரை ரேங்க் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 75 சதவீத கல்வி கட்டண சலுகையும், 51 முதல் 100 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீத சலுகையும், 101 முதல் 1000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 25 சதவீத கல்விக் கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது.
இந்த தகவல்களை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.
356 total views, 1 views today