பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து வேலூர் வந்தவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று கலெக்டர் ராஜேந்திரரத்னு உத்தரவிட்டுள்ளார்.
144 தடை உத்தரவு
தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 22–ந் தேதி மாலை 6 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணி வரை 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, வேட்பாளர்களோ, முகவர்களோ அல்லது அரசியல் கட்சி பிரமுகர்களோ வீடு, வீடாக வாக்கு சேகரிக்க செல்லும்போது 5 நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும்போது கட்சி சின்னம் பொருத்தப்பட்ட தொப்பி, மப்ளர்களை அணிந்து செல்லலாம். ஆனால் விளம்பர பதாகைகளை எடுத்து செல்லக்கூடாது. பிரசார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது.
சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர்கள் தவிர, வெளியூரில் இருந்து வேட்பாளர்களை ஆதரித்து வருகை தந்துள்ள கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் வெளியாட்கள் யாரும் தொகுதியில் தங்கி இருக்க கூடாது. எனவே வெளியாட்கள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும்.
சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு செல்லக்கூடாது. ஒலிப்பான்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் வாக்கு சேகரிக்கும் வகையில் வேட்பாளர்களோ அல்லது அவர்களின் முகவர்களோ கட்சி பூத் அமைத்தல் கூடாது. வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் வேட்பாளர்களின் சின்னங்கள் இருக்கக்கூடாது.
இந்த தடை உத்தரவு நாளை மாலை 6 மணி வரை அமலில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
215 total views, 1 views today